தொண்டை சதை வளர்ச்சி – டான்சில்
டான்சில் என்பது தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சியே. இது ஒரு நிணநீர்ச் சுரப்பி ஆகும். இது இயற்கையாகவே நம் வாய்க்குள் மூன்று இடங்களில் உள்ளது. தொண்டையில் உள்நாக்குக்கு இரண்டு புறமும், நாக்குக்கு அடியிலும், மூக்குக்குப் பின்னாலும் இருக்கும். இவை நம் சுவாசப் பாதைக்கும் உணவுப் பாதைக்கும் ஒரு பாதுகாப்பு வளையமாகச் செயல்படுகிறது.
தொண்டை டான்சில் நாம் உணவு சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கும்போதும் கிருமியோ, வேண்டாத உணவோ அல்லது புதிதாக ஒரு பொருளோ உடலின் உள்ளே போகும்போது, அவற்றிலிருந்து துளியளவு ‘சாம்பிள்’ போல் எடுத்து ஆராய்ந்து, அதுபற்றிய தகவல்களை உடனே மூளைக்கு தெரிவிக்கிற வேலையை தொண்டையில் உள்ள டான்சில்கள் செய்கின்றன. இது நம்முடைய உடலில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த உதவுகிறது.
டான்சில் வீக்கத்தின் வகைகள்:
டான்சில் வீக்கம் இரண்டு வகைப்படும். அவை, ‘திடீர் டான்சில் வீக்கம்’ (Acute Tonsillitis). ‘நாட்பட்ட டான்சில் வீக்கம்’ (Chronic Tonsillitis). இதனால் தொண்டை வலி, காய்ச்சல், தலைவலி, உடல்வலி, குமட்டல், வாந்தி, இருமல், உணவை விழுங்கும்போது வலி, காது வலி போன்றவை ஏற்படும். சிலருக்கு கழுத்தில் நெரி கட்டும். இவர்களுக்கு ஆரம்பத்திலேயே தகுந்த ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை முறையாகக் கொடுத்துவிட்டால், பாதிப்பு ஏற்படாது.
டான்சில்கள் வீக்கத்திற்கு சரியான முறையில் சிகிச்சை பெறாவிட்டால் அதிகளவு பாதிப்பு ஏற்படும். அப்போது டான்சில்களின் நோய் எதிர்ப்புச் சக்தியானது நிரந்தரமாகவே குறைந்துவிடுவதால், கிருமிகளின் பாதிப்பும் நிரந்தரமாகிவிடும். அதனால் டான்சில் வீக்கம் நீடிக்கும். இதை ‘நாட்பட்ட டான்சில் வீக்கம்’ என்று சொல்கிறோம். நாட்பட்ட டான்சில் வீக்கத்தால் அடிக்கடி காய்ச்சல் வரும். தொண்டை வலி நிரந்தரமாகிவிடும். பசி குறையும். குழந்தையின் எடை குறையும்.
டான்சிலில் சீழ் பிடித்து வாய் நாற்றம் ஏற்படும். காதில் சீழ் வடியும். கேட்கும் திறன் குறையும். கழுத்தில் நெரி கட்டுதல் நிரந்தரமாகிவிடும். சைனஸ் தொல்லை நீடிக்கும். இதனால் தலைவலி அடிக்கடி வரும். சிறு குழந்தைகளும் குறட்டை விடும். குரல் கரகரப்பாக மாறிவிடும். டான்சிலில் உள்ள கிருமிகள் சில நச்சுப் பொருட்களை வெளிவிடும். இவை ரத்த ஓட்டத்தில் கலந்து உடலுக்குள் இருக்கும்.இதனால் சிறுநீரகம், எலும்பு மூட்டுகள், இதயம், நுரையீரல் போன்றவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பரவும் தன்மை எப்படி?
தொண்டைக்குள் நாசி நீர் இறங்கல் (Postnasal drip), டான்சிலுக்கு மற்றொரு காரணம். தொண்டை தடிமன் போன்ற நோய்கள் ஏற்படும்போது சுகாதாரமற்ற தண்ணீரைக் குடிக்கும்போது வைரஸ் தொற்றும், சுகாதாரமற்ற உணவு வகைகளை உட்கொள்ளும்போது பாக்டீரியா தொற்றும் உண்டாகிறது. குளிர் காய்ச்சல் ஏற்படலாம். சளி, எச்சில், கைகள் வழியாக இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவுகிறது.
சில பாக்டீரியாக்கள் தொண்டையிலேயே தங்கிவிட வாய்ப்புள்ளது. இவற்றைக் கண்டுகொள்ளாமல் விடும்போது ருமாட்டிக் காய்ச்சல் மற்றும் ரத்தத்தில் தொற்று போன்ற சிக்கல்களை உண்டாக்கும். நெஞ்செரிச்சல், உணவு மேலெழுந்து வருதல், புளித்த ஏப்பம், வாயில் அமிலச் சுவை போன்ற பல அறிகுறிகள் இருக்கலாம். சிலருக்கு இதனால் இருமல், ஆஸ்துமா ஏற்படுவதும் உண்டு.
தவிர்க்க வேண்டியவை
* தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல், ஆற்றில் குளித்தல், எண்ணெய்ப் பலகாரங்களைச் சாப்பிடுதல், புளித்த தயிர் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* குளிர்ச்சியான எண்ணெய் பசையுள்ள பதார்த்தங்களைத் தவிர்ப்பது நல்லது.
* குளிர்பானம், நெய், வெண்ணெய், பாலாடை கட்டி, பால், மோர் ஆகியவற்றைத் தவிர்க்கவும். சர்க்கரை சேர்த்த இனிப்புப் பண்டங்களையும் சாப்பிட கூடாது.
மருத்துவம்
* நொச்சி இலையை வெந்நீரில் கொதிக்க வைத்து ஒரு துணியை அதில் நனைத்து சிறிது கற்பூரமும் சேர்த்து ஒத்தடம் கொடுக்கலாம்.
* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், கருங்காலி, அதிமதுரம், ஏழிலம்பாலை போன்றவற்றை கஷாயம் வைத்து இளஞ்சூட்டில் அடிக்கடி வாய் கொப்பளிக்கலாம்.
* உள்ளுக்கு சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதொடை சூரணத்தை தேன் கலந்து இரண்டு வேளை சாப்பிடலாம்.
* இளம் சூட்டில் தண்ணீர் எடுத்து, அதில் அரை டிஸ்பூன் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும். இது தொண்டைக்கு இதமளிப்பதுடன் அதிலுள்ள சளி வெளியேறவும் உதவும்.
* கடுகை பொடி செய்து தொண்டையில் பற்று போட்டால் தொண்டை வலி குறையும்.
* கிராம்பை நீர் சேர்த்து மை போல அரைத்து பற்று போட்டால் வலி குறையும்.
* நோய் சற்று குணமடைந்த பிறகு மேலும் அதிகரிக்காமல் இருக்க இந்து காந்தம் நெய், சியவனபிராச லேகியம், வெண்பூசணி லேகியம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.
* தலைக்கு நொச்சித் தைலம், துளசித் தைலம் போன்றவற்றைத் தேய்த்துக் குழந்தையைக் குளிப்பாட்டலாம்.
* வைட்டமின் சி உள்ள மஞ்சள், ஆரஞ்சு, காய்கறிகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும். உணவில் பூண்டு அதிகம் சேர்த்தால், நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
* இருமல், தொண்டை வலி இருப்பவர்கள், சிறிதளவு வசம்பையும் மிளகையும் மென்று சாப்பிடலாம்.
* பாலில் மஞ்சள் தூள், தேன், பொடித்த மிளகு ஆகியவற்றைப் போட்டு இரவு படுக்கும்போது அருந்த, தொண்டை வலி நீங்கி, இதமாக இருக்கும்.
* கடுக்காய் தோல் சிறு துண்டை எடுத்து வாயில் போட்டு அடக்கிக்கொள்ள வேண்டும். ஊறிய உமிழ் நீரை விழுங்கிவிட வேண்டும்.
* சுக்கு, பால்மிளகு, திப்பிலி ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடத் தொண்டை கரகரப்பு குறையும்.
Leave a Reply