Tag Archives: மிளகு

சூலைப் புண்

கந்தகம் விராகனிடை ஐந்து, வெள்ளைக் குங்கிலியம் விரகனிடை பத்து, பொடித்து, பத்து குன்றியிடை வெள்ளீயத்தை உருக்கி அதில் இரசம் மூன்று விராகன் விட்டுக்கிண்டி எடுத்துப் பொடித்து, மேற்கூறிய இரண்டையும் சேர்த்து அரைத்து, ஆறு பங்கு செய்து மூன்று நாள் ஆறுவேளை புகை போடவும். பத்தியம் கொள்ளவும். நாங்கு நாட்களுக்கு ஒரு முறை தலை முழுகுதல் வேண்டும். இரண்டு மணி நேரம் தண்ணீரில் குளித்தல் நன்று.

இது வேறு;
காரீயம், இரசம் விராகன் முக்கால், துத்தம், துரிசு, வெள்ளைப் பாஷாணம், மிளகு, கடுகு விராகன் பதிமூன்று, கருங்குங்கிலியம் பணவிடை பதினாறு, அரிதாரம் பணவிடை ஐந்து, கவுரிபாஷாணம் விராகன் ஐந்து, மேற்படி காரீயத்தை உருக்கி இரசத்தை விட்டு முரித்து எடுத்து மற்றவைகளையும் சேர்த்து பருத்தி இலைச்சாறு, கையாந்தகரைச் சாறு, ஊமத்த இலைச்சாறு, வேலிப்பருத்தி இலைச்சாறு, இவைகளில் ஒவ்வொரு சாற்றிலும் ஒவ்வொரு நாழிகை அரைத்து ஒன்பது பாகமாகக்கொண்டு புகை போடவும்.
பத்தியம்:- பழஞ்சோறு, உப்பு, வெங்காயம், விளக்கெண்ணை. தண்ணீரில் முழுகவும்.
முறிவு:- வெல்லம்

குட்டங்கள்

கடுகு, திரிபலை, சாரணைவேர், ஊழாத்திப்பட்டை, அமுக்கராங்கிழங்கு, பிறப்பங்கிழங்கு, நறுக்குமூலம், தூதுவளைவேர், சிறுதேக்கு, ஓமம், வாய்விளங்கம், செவியம், சீரகம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, பூலாங்கிழங்கு, ஆனைதிப்பிலி, சங்கம்பட்டை வகைக்குப் பலம் ஒன்று. இவற்றை ஆற்று வெள்ளத் தண்ணீரிலிட்டு ஐந்து நாள் ஊறவைத்து பிழிந்த கிஷாயத்தில், வெள்ளெருக்கின் சாறு, கரிப்பான் சாறு, ஆயில்சாறு, மேற்படி பட்டைச்சாறு சேர்த்து அதில் பரங்கிப்பட்டை, சுக்கு, திப்பிலி, மிளகு, கருஞ்சீரகம், ஓமம், பெருங்காயம் வகைக்கு விராகன் மூன்று, இவற்றை இளவறுப்பாக வறுத்து சூரணித்துக் கலக்கி தலை மயிர், குடல் நீக்கிய கோழிக்குள் வைத்துக்கட்டி தோலாயந்திரங்கட்டித் தொங்கவிட்டு மூடி, தீபாக்கினியாக முப்பது நாழிகை எரித்து இரண்டுபடி கிஷாயமி

ருக்கையில் இறக்கி, கோழியை எடுத்து எலும்பு நீக்கி, உலர்த்திச் சூரணித்து, வெருகடி அளவு தேனில் இருபத்தைந்து நாள் உட்கொள்ள குஷ்டம், சூலை நோய் தீரும்.

ஆராத புண்

இரசம், காரீயம், மிளகு, கடுகு, கருங்குங்கிலியம் எருக்கு கரி வகைக்கு பலம் மூன்று, துத்தம், வெள்ளைப் பாசாணம், கந்தகம் வகைக்குப் பலம் ஒன்று இவைகளைப் பொடித்துப் புண்களுக்குப் புகை போடவும்.

இதுவும் அது:
பருத்தி இலை, வேப்பம்பட்டை, ஆலம்பட்டை, தவசி முருங்கைவேர், நாயுருவிவேர், கிளுவைவேர், கருஞ்சீரகம், ஓமம், சுக்கு, திப்பிலி, வெள்ளை வெங்காயம், சிறுகீரைவேர் ஓர் அளவு கூட்டி இடித்து நல்லெண்ணையிலிட்டு காய்ச்சி புரையோடு புண்களுக்கு சீலையில் நனைத்து வைக்கவும். வாய் விரிந்த புண்ணுக்கு எண்ணையைப் பஞ்சில் நனைத்துப் போடவும்.
உள்வினையற விழும்பிச் சாறு சேர்த்துச் சாப்பிடவும். புளிம்பிரண்டை, சமூலமிடித்து களிகிண்டி நல்லெண்ணை வெல்லம் சேர்த்து உண்ணவும். கருஞ்சூரைப் பட்டையை இடித்து வீக்கத்திற்கு வைத்துக் கட்டவும்.

கண்டமாலை

தைராயிடு சுரப்பியின் அசாதாரணமான வீக்கமே கண்டமாலை என அழைக்கப்படுகிறது. தைராயிடு சுரப்பியின் வீக்கத்தால் கழுத்தும் குரல்வளையும் வீக்கம் அடைகின்றன.

புங்கம்வேர், ஆயில்பட்டை, தூதுவளைவேர், கழற்சிவேர், வெள்ளறுகு, நிலஆவரைவேர், சங்கங்குப்பிவேர், அவிரிவேர், சுக்கு, மிளகு, அப்பக்கோவைக் கிழங்கு, வெள்வெங்காயம், கருங்குங்கிலியம், வாய்விளங்கம், கடுகு, வெந்தயம், திப்பிலி மூலம், கண்டுபரங்கி வகைக்கு பலம் ஒன்று, சிற்றரத்தை பலம் 5, திப்பிலி பலம் 8 இவைகளை இடித்து, 3பட் நல்லெண்ணையிலிட்டுக் காய்ச்சி கடுகு பதத்தில் வடித்து இரண்டு விராகனிடை காலை மாலை உட்கொள்ளவும். பத்தியம் காக்கவும்.

இதுவுமது:

அரிதாரத்தை நீல நிறமாகச் சுட்டு நீரில் அரைத்து சிலையிலூட்டி திரியேற்றப் புண்ணும், சீழும் மாறும்.
கழலை அரையாமல் புண்ணாகாமல் கட்டியாக இருந்தால் அந்தக் கழலையை அறுத்து திரி போடவும்.
மூன்று அல்லது நான்கு நாள் சென்றபின் செம்புண்ணானால் வெள்ளைக் குங்கிலியம், படிகாரம், மயில் துத்தம், பொன்மெழுகு வகைக்கு விரகன் ஒன்று பொடித்து சிறிது நல்லெண்ணையிட்டுக் காய்ச்சி தண்ணீரில் விட்டு எடுத்து வெங்கல வட்டிலில் போட்டு செம்புக்குவளையால் அரைத்து களிம்பு செய்து துணியில் தடவிப் புண்ணுக்குப் போடவும். மறு நாள் புளியந்தழை அவித்த தண்ணீரில் கழுவவும்.

மிளகு

* ஒரே ஒரு மிளகு போதும்… உண்ணும் உணவு சுவையாக.

* இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளி காணாமல் போகும்.

* மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்து தலைக்கு தேய்த்தால் கேசம்கூட முசு முசுவென்று வளரும்.

* நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்.

* ஐந்து மிளகும் சுக்கும் திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.

* ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் (சோம்பு) இடித்து உண்ண, மூலநோய் வந்த சுவடின்றி தானே மறையும்.

* ஏழு மிளகை பொடி செய்து நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால் நல்ல பசி எடுக்கும். தொண்டைப்புண்ணும் தொண்டைக்கட்டும் விட்டுப் போகும்.

* எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் வாந்திகூட எட்டி நிற்கும்.

* ஒன்பது மிளகும் துளசியும், ஒவ்வாமையை (அலர்ஜி) துரத்தியடிக்கும்.*

* பத்து மிளகை வாயில் போட்டு கடித்து மென்று விட்டு, பகைவன் வீட்டிலும் பயமேயின்றி விருந்துண்ணலாம்.

அதிமதுரம்

புகை பிடிக்க தூண்டும் உணர்வை மறக்கடிக்கும். இந்த மூலிகையைச் சாப்பிட சளியுடன் கலந்து வரும் இரத்தம் நிற்கும்!

அதிமதுரவேரை சுவைக்க வித்தியாசமான இனிப்பு தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும். தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.

அதிமதுரத்துடன் இம்பூரல் கலந்து பொடித்துக் கொண்டு காலை, மாலை 1-2 கிராம் அளவு சாப்பிட சளியுடன் கலந்து வரும் இரத்தம் நிற்கும்.

அதிமதுரம், சீரகம் இரண்டும் சமஅளவு எடுத்து எட்டு பங்கு நீரிலிட்டு ஒரு பங்காகக் காய்ச்சிய குடிநீரை, சூல் கொண்ட பெண்களின் வாந்தியைப் போக்கத் தரலாம்.

அதிமதுர வேர்ப்பொடியைத் தேனுடன் கலந்து மஞ்சள் காமாலைக்குத் தரலாம்.

அதிமதுரம், சீரகம் இரண்டையும் சமஅளவு எடுத்து குடிநீரிட்டு குடித்து வர சூல் காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு தீரும்.

குளிர்ச்சித்தன்மை கொண்ட அதிமதுர வேரை தைலங்களில் சேர்க்க, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இளநரையையும் கட்டுப்படுத்தும் என்பதை ‘அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும்’ எனும் மூலிகைக் குறள் தெரிவிக்கிறது. இதன் இலையை அரைத்து உடலில் பூசிக்குளிக்க வியர்வை நாற்றம் மறையும். சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், விளக்கெண்ணெய்யைத் தடவி, அதன் மீது இதன் இலையை வைக்க விறுவிறுப்புத் தன்மை ஏற்பட்டு தசை இளகுவதை உணர முடியும்.

அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.

சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம்.

சைனஸ் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம். இனிப்புச் சுவையுடன் உடலை வளமையாக்கும் தன்மை இருப்பதால், இனிப்பு வகைகளில் சர்க்கரைக்கு மாற்றாக அதிமதுரத்தைச் சிறிதளவு முயலலாம்.

அதிமதுரத்தின் சாரங்கள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதிப்படுத்துகிறது

பொதுவாக அதிமதுரம் ஒரு ‘நிதானமான’மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும். ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு மருந்து. நுரையீரலுக்கு சிறந்த டானிக்.

அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும்.

அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.

வயிற்றுப்புண்களுக்கு – அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் – காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.