அதிமதுரம்

புகை பிடிக்க தூண்டும் உணர்வை மறக்கடிக்கும். இந்த மூலிகையைச் சாப்பிட சளியுடன் கலந்து வரும் இரத்தம் நிற்கும்!

அதிமதுரவேரை சுவைக்க வித்தியாசமான இனிப்பு தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும். தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.

அதிமதுரத்துடன் இம்பூரல் கலந்து பொடித்துக் கொண்டு காலை, மாலை 1-2 கிராம் அளவு சாப்பிட சளியுடன் கலந்து வரும் இரத்தம் நிற்கும்.

அதிமதுரம், சீரகம் இரண்டும் சமஅளவு எடுத்து எட்டு பங்கு நீரிலிட்டு ஒரு பங்காகக் காய்ச்சிய குடிநீரை, சூல் கொண்ட பெண்களின் வாந்தியைப் போக்கத் தரலாம்.

அதிமதுர வேர்ப்பொடியைத் தேனுடன் கலந்து மஞ்சள் காமாலைக்குத் தரலாம்.

அதிமதுரம், சீரகம் இரண்டையும் சமஅளவு எடுத்து குடிநீரிட்டு குடித்து வர சூல் காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு தீரும்.

குளிர்ச்சித்தன்மை கொண்ட அதிமதுர வேரை தைலங்களில் சேர்க்க, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இளநரையையும் கட்டுப்படுத்தும் என்பதை ‘அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும்’ எனும் மூலிகைக் குறள் தெரிவிக்கிறது. இதன் இலையை அரைத்து உடலில் பூசிக்குளிக்க வியர்வை நாற்றம் மறையும். சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், விளக்கெண்ணெய்யைத் தடவி, அதன் மீது இதன் இலையை வைக்க விறுவிறுப்புத் தன்மை ஏற்பட்டு தசை இளகுவதை உணர முடியும்.

அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.

சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம்.

சைனஸ் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம். இனிப்புச் சுவையுடன் உடலை வளமையாக்கும் தன்மை இருப்பதால், இனிப்பு வகைகளில் சர்க்கரைக்கு மாற்றாக அதிமதுரத்தைச் சிறிதளவு முயலலாம்.

அதிமதுரத்தின் சாரங்கள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதிப்படுத்துகிறது

பொதுவாக அதிமதுரம் ஒரு ‘நிதானமான’மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும். ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு மருந்து. நுரையீரலுக்கு சிறந்த டானிக்.

அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும்.

அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.

வயிற்றுப்புண்களுக்கு – அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் – காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *