இரணங்கள்
பாவட்ட இலை அல்லது விழிம்பியிலையை விளக்கெண்ணை தடவி வாட்டி, புண்ணின்மேல் போட்டுக் கட்டவும். புரையடங்கும். வீக்கம் வற்றும்.
முளை
பருத்திப்பஞ்சுவை வேலிப்பருத்திப் பாலில் அரைத்து பஞ்ச்சில் துவட்டிப் புண்ணில் போட முளை கரையும். புழு விழும்.
புண்ணில் சீழ், சதை கரைய
நாயுருவி சாம்பலும், சுண்ணாம்பும் சேர்த்து அரைத்து புண்ணில் மூன்று நாள் போடவும். எரிந்தால் தண்ணீர் விடவும்.
பவுத்திரம்
பெருங்காயம் விராகன் எட்டு, கோரோசனை, இந்துப்பு, சாதிக்காய், கிராம்பு வகைக்கு நான்கு பலம், கொடிவேலி வேர்பட்டை, செங்கதாரிப் பட்டை விராகன் பதினாறு இவற்றை அரைத்து எண்ணையிலிட்டு, பதமாய்க் காய்ச்சி சிறங்கையளவு உட்கொள்ள இருபது நாழிகையில் ஆணி கழன்று விழும். ஆவாரங்கொழுந்தைப் புண்ணின்மேல் வைத்துக் கட்டி வரவும். நான்கு வகை பெளத்திரமும் தீரும்.
கெர்ப்பவிப்புருதி
கோவைக் கிழங்கைத் துருவி ஒரு பிடி, குருவை அரிசி ஒரு பிடி சேர்த்து இடித்து வெள்ளாட்டுப்பால் விட்டு களிகிண்டி மூன்று நாள் உண்ணவும். பீர்க்கம் விதை இருபதை நீரில் அரைத்துக் குடிக்கவும்.
அப்பக்கோவை கிழங்கு, கொல்லன் கோவைக் கிழங்கு, குருவை அரிசி சம அளவு சேர்த்து இடித்துக் களி கிண்டி உண்ணவும்.